அருள்மிகு விராலிமலை ஸ்ரீ சதாசிவ சுவாமிகள் வரலாறு
கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள், கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் எனப்படுவர்.. மாமனிதர்களும் கூட மிக குறுகிய காலமே நினைவில்
கொள்ளப்படுகிறார்கள். மறைந்த சில ஆண்டுகளில் முற்றிலுமாக மறக்கப்படுகிறார்கள் .
ஆனால் தவசீலர்களான
ஞானிகள் சித்தர்களை ஒருபோதும் மறக்கப்படுவதில்லை..நம்மிடையே மிகச்சிறந்த சித்தராக வாழ்ந்து 85 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த ஞான சித்தர் ஸ்ரீ விராலிமலை சதாசிவ
சுவாமிகளின் வரலாற்றுச்சுருக்கம்.
சுவாமிகள் காசியில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தையின் பராமரிப்பிலேயே இருந்துள்ளார். இவருடைய தந்தையாரும் சிறந்த தவயோகியாக இருந்த காரணத்தால் இவருடைய இறுதிக்காலத்தில் சுவாமிகளுக்கு உபதேசம் செய்து தீட்சை அளித்து உள்ளார். பின்னர் சுவாமிகள் இமயமலை சென்று பல மகான்களை சந்தித்து ஆசிபெற்று பல தவயோகங்களைக்கற்று சுவர்ண சித்தி பெற்று பின்னர் தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ளார். அக்கால கட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட விராலிமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய குகையில் பல காலம் தவமிருந்துள்ளார். இன்றும் அக்குகையில் சுவாமிகளுக்கு பூஜை
செய்து வழிபடுகின்றனர்..
குருவானவர் தவம் செய்த குகையின் முகப்பு...
குருவானவர் தவம் செய்த குகை.... உட்புறத்தில்...
சித்தர்களுடைய அடையாளமே
அவர்கள் பல நோய்களை தீர்க்கும் மூலிகைகளையும் வைத்திய முறைகளும் கண்டு உணர்ந்து
அதன் மூலம் மக்களுக்கு தீராத நோய்களையும், தீராத
பிரச்சினைகளையும் தீர்க்கும் வல்லமை தானே! அவ்வாறே சுவாமிகள் விராலிமலையில்
இருந்தபோது அங்குள்ள மக்களுக்கு நோய் தீரவும், இடர்கள் தீரவும் பல சித்துக்களை செய்து உள்ளார்.இதன் மூலம் இவரை சித்தர் என அறிந்து கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் இவரிடம் ரசவாதம் எனும் தங்கம் செய்யும் வித்தையை கற்றுத்தரும்படி வற்புறுத்தவே அதில் விருப்பமில்லாத சுவாமிகள்..அங்கிருந்து புறப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கட்டுப்பள்ளிக்கு
அருகில் உள்ள திருசடைவிளந்தை எனும் கிராமத்தில் மடம் அமைத்து தவமிருந்து வந்தார்.இக்காலகட்டத்தில் அங்கு ஒரு கோயில் கட்ட திருவுள்ளம் கொண்டு இடம் தேர்வு செய்து
பணிகளை தொடங்கினார்.
கோயில் கட்டும்
தொழிலாளர்களுக்கு கூலியாக விபூதியை மடித்துக்கொடுத்து வீட்டிற்குச்சென்று
பிரித்துப்பார்க்கும்படி தருவார். அவ்வாறு அவர்கள் வீட்டிற்குச்சென்றுவிபூதியை
பிரித்துப்பார்த்தால் அவர்களுடைய கூலிக்கானப் பணம் இருக்கும்.
இதைத்தெரிந்துகொண்ட
சில பேராசைக்காரர்கள் இதே போல் நிறைய பொருள், பணம்
வரவழைத்துத்தரும்படி தொடர்ந்து தொல்லை தரவே, அங்கிருந்து
புறப்பட்டு சிதம்பரம்,திருவிடைமருதூர்
கோயில்களுக்குச் சென்று பின் திருபுவனம் அருள்மிகு கம்பகரேஸ்வரர் கோவில் (சரபர்
ஸ்தலத்தில்) சில காலம் தங்கியுள்ளார்.
திருபுவனத்தில் அமைந்திருக்கும் ஜீவசமாதி ஆலயத்தின் முகப்புத்தோற்றம்....
அச்சமயம் சுவாமிகள் இவ்வூர் மக்களுக்கு தீராத பிணிகளை போக்கியும், குழந்தைப்பேறு அருளியும், அருள்பாளித்து உள்ளார். திருபுவனத்தைச் சேர்ந்த நாயுடு சமூகத்தைச்சேர்ந்த பாலசுந்தர நாயுடு, கிருஷ்ணசாமி நாயுடு ஆகியோர் சுவாமிகளிடம் ஆசி பெற்று கிருஷ்ணசாமி நாயுடுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததால் சுவாமிகள் மீது பற்று கொண்டு திருபுவனம் அருள்மிகு கம்பகரேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு வலதுபுறத்தில்
உள்ள இடத்தை வாங்கி சுவாமிகளுக்கு மடம் அமைத்து தங்க
வைத்து பராமரித்துஉள்ளனர்..
சுவாமிகளுக்கு பணிவிடை
செய்ய தவத்திரு சுந்தரேச அய்யர் அவர்களை நியமனம் செய்துள்ளனர். அவர்கள் தினமும்
சுவாமிகளுக்கு பிரியமான சிற்றுண்டியான உப்புமாவும்,காப்பியும் தப்பாமல் செய்து கொடுத்து வந்துள்ளார்கள். இதே போல்
திருபுவனத்திற்கு அருகில் உள்ள ஆடுதுறை என்ற ஊரில் இருந்த ஆறுமுக செட்டியார்
அவர்களின் முன்னோர்களும் சுவாமியின் பக்தர்களாக இருந்து சுவாமிகளுக்கு பணிவிடை செய்துள்ளனர். இந்த செட்டியார் வகையறாவில் சுவாமி வாழ்ந்த காலத்தில் அவரால்
பெயர்
சூட்டப்பட்டு சுவாமியின் விருப்பமான உப்புமாவை அவரது கையாலேயே வாங்கிபிரசாதமாக
சாப்பிட்ட தனலெட்சுமி அம்மையார் தனது 91வது வயதில் இன்னும் நாகப்பட்டினத்தில்
சட்டையப்பர் தெற்கு வீதியில் வசித்து வருகிறார்கள். இவருக்கும் இவரது
சகோதரருக்கும் முறையே தனலெட்சுமி, ஆறுமுகம் என்று பெயர்
சூட்டியுள்ளார்.
சுவாமிகளின் சமாதி அடையும் காலம் வரை இவர்களும் சுவாமிகளுக்கு
பணிவிடைசெய்துள்ளனர்.
குரு
பயன்படுத்திய சாய்வு நாற்காலி...
சுவாமிகளின் பூர்வீகம்
பற்றிய தகவல்களை இந்த தனலட்சுமி அம்மையார்
வாய்மொழியாகவே சொன்னதை அறிகிறோம்.
சுவாமிகள் சமாதி அடைந்த போது தனலட்சுமி அம்மையார் அருகிலேயே இருந்துள்ளார்.
இவருடைய முன்னோர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து சமாதியில் வைத்த நிகழ்வை அருகில்
இருந்து தனது சிறு வயதில் பார்த்து உள்ளார்..
குருவின் ஜீவசமாதியின் மேல் சிவலிங்கம்....
. சுவாமிகள் பல்வேறு யோக முறைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் நவகண்ட
யோகத்தில்
அமர்ந்து இருக்கும் போது உடல் ஒன்பது பாகங்களாக பிரிந்து
காணப்படும். அப்படி ஒரு
தடவை இதைக்கண்ட உள்ளூர் வாசிகள் சிலர் பயந்து போய் தனலட்சுமி அம்மையாரின்
வீட்டிற்குச்சென்று சுவாமியை யாரோ துண்டு துண்டாக வெட்டி போட்டுள்ளனர் என்று கூற
அவர் பதறிப்போய் மடத்திற்கு சென்றுபார்த்தபோது சுவாமி அமைதியாக அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தாராம்
இதுபோன்ற நிகழ்வை அப்போது வாழ்ந்த உள்ளூர்வாசிகள் பலரும் கண்டதாக
தற்போது
உள்ளவர்கள் கூறுகின்றனர். இவரிடம் ஒரு பக்தர் தாம் குஷ்ட நோயால் அவதிப்படுவதாகவும், பல்வேறு வைத்தியங்கள் செய்தும் இது தீர்க்க முடியாத நோய் என வைத்தியர்கள்
கைவிட்ட நிலையில் சுவாமிகளிடம் முறையிட சுவாமிகள் அவருக்கு ஒரு மருந்து தைலம்
கொடுத்து காலை இரண்டு சொட்டு பாலில் விட்டு சாப்பிட்டு விட்டு மருந்தை பத்திரமாக
பூட்டி வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த பக்தரும் அதன்படி மருந்து
உண்டுவிட்டு அலமாரியில் வைத்து பூட்டி சாவியை தன்னிடம் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
48 நாட்கள் சுவாமி கொடுத்த மருந்தை சாப்பிட்டதில் தீர்க்கமுடியாத நோய் முற்றிலும்
நீங்கிய அதிசயம் நடந்துள்ளது. மேலும் ஒரு அதிசயமாக மருந்து பூட்டி வைத்திருந்த
அலமாரியின் இரும்பு சாவி தங்க சாவியாக மாறிவிட்டிருந்தது. மீதமிருந்த
மருந்தையும், சாவியையும் சுவாமியிடம் கொண்டுவந்து கொடுத்து சுவாமி எனக்கு நோய் பூரணமாக
குணமாகிவிட்டது. ஆனால் இந்த இரும்புச்சாவி பொன்னிறமாக மாறிவிட்டது எனக்கூற, சுவாமிகள் அந்த மீதமிருந்த மருந்தினையும், சாவியையும் வாங்கி
மடத்தில் சுவாமிகள் தன் தவ வலிமையால் பல தீர்த்தங்களை உள்ளடக்கி உருவாக்கிய
கிணற்றில் போட்டுவிட்டார்.
இப்போது அந்த கிணற்று நீர் நோய் தீர்க்கும் தீர்த்தமாக பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இங்கு வரும் பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். பலனும் அடைந்து உள்ளனர்.
கிணற்று நீர் மருந்தாக பயன்படுத்துவது வேறு எங்கும் இல்லாத அதிசயம் ஆகும். மேலும் சுவாமிகள் மூலஸ்தான கோபுரம் முற்றிலும் செப்பு ஓட்டினால் வேயப்பட்டது
100வருடங்களுக்கு பிறகு அதே நிலையில் பழுதடையாமல் உள்ளது
அதிசயமாகும். இப்படி பல
சிறப்புகள் கொண்ட விராலிமலை சதாசிவ மடத்தை புனரமைத்து திருப்பணி வேலைகள்
துவங்கப்பட்டுள்ளது..
.
புனரமைப்பைத்தொடங்கிய
போது நடைபெற்ற பூஜையின் போது....
சுவாமிகள் 06.12.1929ம் வருடம் சோமவார திங்கள் மூல நட்சத்திரத்தில் மகா
சமாதி
எழுந்தருளியுள்ளார்.
சுவாமிகள் நோய் தீர்க்கும் மருத்துவராக வேண்டுவோர்க்கு வேண்டுவதை அருளும் அற்புத சக்தியோடு விளங்குகிறார். இங்கு சற்குருநாதருக்கு எல்லா
வியாழக்கிழமைகளிலும் மற்றும் மாத மூல நட்சத்திரத்திலும், அபிஷேக
ஆராதனைகள் செய்யப்பட்டு பிரசாத அன்னம் வழங்கப்படுகிறது. கார்த்திகை மாத மூல நட்சத்திரத்தன்று சுவாமிகளுக்கு மகா குருபூஜை செய்யப்பட்டு
ஆயிரக்கணக்கான
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புகளைக்கொண்ட விராலிமலை ஸ்ரீ சதாசிவசுவாமிகள் மடத்தின் திருப்பணித் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பக்தர்கள் இந்த திருப்பணிகைங்கர்யத்தில் பங்குகொண்டு ஸ்ரீ விராலிமலை சதாசிவ சுவாமிகளின் அருளாசிபெற
வேண்டுகிறோம்.
ஸ்ரீ விராலிமலை சாம்பசதாசிவ சுவாமிகள் டிரஸ்ட், திருபுவனம்.